17 April 2008

நீதிக் கதைகள் - பகுதி 2

ஆசைக்கு எல்லை இல்லை!!!!

ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை,குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான்.அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது.அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அவ் வண்ணமே ஆவாய்" என்றது.அவன் அரசனாகி விட்டான்.

முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான்.அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.

அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை. "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது.ஆகையால் என்னை மேகமாக்கிவிடு" என்று வேண்டினான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.

பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்த பாறையை அசைக்கவே முடியவில்லை. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்திவாய்ந்தது எனவே என்னை பாறையாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான்.அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்த பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது."தெய்வமே பாறையை விட கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விடடான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும்.ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி.ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.

------------------------------------------------------------------------------------------------

அணில் சொன்ன சேதி!!!

அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.

‘‘நிஜமாவா?’’ என்றது மான்.

‘‘ஐயையோ அப்படியா?’’ இது முயல்.

‘‘சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?’’ வியந்தது நரி.

யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது. ‘‘நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாகச் சொல்லு!’’ ‘‘இந்த பூமியிலே இனி வாழ முடியாது.செவ்வாய் கிரகத்துலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும். பூமிக்கு இனி குட்பை சொல்லிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக் கொண்டதை நான் கேட்டேன்’’ என்று அணில் சொன்னதைக்கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின. சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்குத் தினமும் சென்று அணில் தகவல்களைத் திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை! விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம், கொட்டைகளைத் தின்று விட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம்! சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளை கவலையடையச் செய்தது. வேற்று கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிட்டுவது பற்றி விலங்குகள் பரபரப்பாகப் பேசிக்கொண்டன. இப்போது, ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.

‘எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?!’’ வினவியது முயல். ‘‘அதுவா?! அவங்க இந்த பூமியை ஏற்கெனவே பாழ்படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்குறது ஆபத்துன்னு வேற இடத்துக்குப் போறாங்க’’. ‘‘நாமும் அவங்களோடு போக முடியாதா?’’ கேட்டது மான்.

‘‘உஹ¨ம்! அவங்க தங்களை காப்பாத் திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர, நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை’’

‘‘அப்போ, நாம என்ன பன்றது?’’ ‘‘நாம இங்கேயே அழிய வேண்டியது தான்’’. அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை.

அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்துக்கு விரைந்தது. சில தகவல்களுடன் மாலை காட்டுக்குத் திரும்பியது. ‘‘நம்மையும் அழைத்துச் செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க!’’ என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.

‘‘அப்படியா?! என்று மயில் கேட்க, ‘‘உண்மையாகவே நம்மை அழைச்சுட்டுப் போறாங்களா?!’’ என்றது ஆமை. ‘‘ஆமா! அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்குறாங்க. அதனாலதான்!’’ ‘‘அட, புரிஞ்சுகிட்டாங்களா?!’’

‘‘ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும், குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படி பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம் கவலைப்படவேண்டாம்’’. இதைக்கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.

மறுநாள், முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்தது அணில். ‘‘அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!’’ எல்லாரும் விழிக்க, அணில் விளக்கியது. ‘‘தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிகுவாங்களாம்!’’ அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.

‘‘எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!’’ ‘‘என்ன சொல்றீங்க?!’’ கேட்டது நரி. ‘‘இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியை பாழ்படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்’’ என்று யானை நிதானமாகச் சொன்னது. இதைக் கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

நன்றி : ஜனார்த்தனன் , சுட்டிவிகடன்.


------------------------------------------------------------------------------------------------

வழிகாட்டி!!!


ஒரு ஜென் துறவி தனது சீடனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, எதுவோ சந்தேகம் வர அவர் ஒரு புத்தகத்தைக் காண்பித்து இதில் உள்ளதைப் படித்துச் சொல் என்றாராம். அதற்கு மாணவன் படித்துச் சொல்லியபின் கேட்டான், "குருவே உங்களுக்குப் படிக்கத் தெரியாது, ஆனாலும் எப்படி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்?" என்று.

அதற்கு அவர் அவனை வெளியில் அழைத்துச் சென்று, "அங்கே பார், அது தான் நிலா!" என்று சொன்னார்.பின் அவர் சொன்னார், "புத்தகம் என்பது என் கை போன்றது. கையால் நிலவைச் சுட்டிகாட்டியதால் என் கை நிலவாக ஆகிவிடாது. என் கை இல்லாமலும் நிலவைப் பார்க்க உன்னால் முடியும். அப்படி பார்க்க முடியாத நேரத்தில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது, கையின் பந்தம் நிலவைச் சுட்டிக்காட்டிய உடன் முடிந்து விட்டது. அதற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் என் கை துணையின்றி நிலவைப் பார்க்கலாம் என்றார்.

நன்றி : மரத்தடி வலைதளம், திரு.ஐயப்பன்

------------------------------------------------------------------------------------------------


குதிரையால் வந்த போர்!!!


மகேந்திரபுரியை ஆட்சி செய்து வந்தார் மன்னன் நரசிம்மர். விலங்குகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மன்னர், ஆசை ஆசையாய் ஒரு குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரையை பராமரிக்க வேலையாட்கள், மருத்துவர் குழு, போர்ப் பயிற்சி கொடுக்க தனியாக ஆசிரியர் என்று ஒரு துறையையே உருவாக்கினார். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பெரிய அளவில் பராமரிப்பு என்பதால் குதிரையும் ‘கொழு கொழு’வென வளர்ந்தது.

குதிரையின் கம்பீரமான தோற்றம் மன்னரை கர்வம் கொள்ளச் செய்தது. இதையடுத்து தன் குதிரைக்காக பெரிய அளவில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். விழாவில் கலந்து கொள்ள பக்கத்து நாட்டு மன்னர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்தார். விழாவில், ‘‘உலகிலேயே சிறந்த குதிரை என்னுடையதுதான். இந்தக் குதிரையைக் காட்டிலும் சிறந்த குதிரை வேறு எங்குமே இருக்க முடியாது!’’ என்று பேசினார். விழா சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால்... மன்னரின் கர்வம் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

ஒருநாள் தலைமை ஒற்றன் அவசர செய்தியுடன் வந்து மன்னரைச் சந்தித்தான். ‘‘மன்னருக்கு வணக்கம்! நம் ஒற்றர் படை மூலமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஊசியிலை நாட்டு மன்னர் தேசிங்கு ஒரு குதிரை வளர்த்து வருகிறார். மன்னர் சொல்வதை அந்தக் குதிரை அப்படியே செய்யுமாம்...’’

‘‘நிறுத்து ஒற்றனே! இதை எல்லாம் என்னுடைய குதிரையும் செய்யுமே... என் குதிரையின் வேகத்துக்கு எந்தக் குதிரையும் ஈடு கொடுக்க முடியாது’’ என்று இடைமறித்துப் பேசினார் மன்னர். ‘‘மன்னர்... மன்னா, தன் குதிரைதான் உலகிலேயே சிறந்த குதிரை என்று பெரிய அளவில் விழா எடுக்கப் போகிறாராம் மன்னர் தேசிங்கு. அந்த விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கும் அழைப்பு அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்களாம்’’ என்று கூறினான் ஒற்றன். ‘‘என்னது?!

என் குதிரைக்கு போட்டியாக இன்னொரு குதிரையா..?! இருக்கவே முடியாது. என் குதிரையின் பலம் என்ன என்பதை அந்த மன்னருக்குத் தெரியப்படுத்துகிறேன்’’ என்று சீறினார் மன்னர் நரசிம்மர். விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழுடன் சென்றார் மன்னர் நரசிம்மர். விழா ஆரம்பமானது.

விழாவில், ‘‘நான் ஒரு குதிரை வளர்க்கிறேன். அந்தக் குதிரை அபார ஆற்றல் கொண்டது. நான் சொல்வதை அப்படியே செய்யும். என் குதிரையைவிட சிறந்த குதிரை உலகில் யாரிடமும் இல்லை என்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது’’ என்று பேசினார் மன்னர் தேசிங்கு.

பின் தேசிங்கு&வின் குதிரை அவரது கட்டளைக்கு ஏற்ப நடனமாடியது. குதிரையைப் பார்த்து மற்ற மன்னர்கள் எல்லோரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், மன்னர் நரசிம்மர் மட்டும் அமைதி இன்றி இருந்தார். அப்போது... ‘‘நிறுத்துங்கள்! இந்தக் குதிரையைவிட என் குதிரைக்கு பல திறமைகள் உண்டு. இதைக் காட்டிலும் என் குதிரைதான் சிறந்தது. இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும்’’ என்று ஆவேசமாகச் சொன்னார் நரசிம்மர்.

இதைக் கேட்டவுடன் விழா அரங்கமே அதிர்ச்சி அடைந்தது. ‘‘என் குதிரையின் பலத்தை மன்னர் நரசிம்மருக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். நான் போருக்குத் தயார்!’’ என்று சொன்னார் மன்னர் தேசிங்கு. பௌர்ணமி தினத்தன்று இரு நாட்டு மன்னர்களும் தன் படை பரிவாரங்களுடன் போர்களத்தில் மோதிக் கொண்டனர். இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தன. மன்னர்கள் இருவரும் தங்களது குதிரைகளில் அமர்ந்து கடுமையாக சண்டை போட்டனர்.

இறந்த உடல்களை தின்பதற்காக ‘கீச்...கீச்ச்’ என கத்தியபடி கழுகுகள் கூட்டம் வானில் வட்டமடித்தன. அப்போது அருகில் இருந்த காட்டில் வசித்து வரும் முனிவர் கழுகுகளின் சத்தம் கேட்டு போர்களத்துக்கு விரைந்தார்.

‘‘நிறுத்துங்கள்!’’ என்றார் முனிவர். முனிவரையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு மன்னர்கள் இருவரும் சண்டை போடுவதை நிறுத்தினர். ‘‘எதற்காக சண்டை போடுகிறீர்கள்?!’’ என்றார் முனிவர்.

போருக்கான காரணத்தை இருவரும் விளக்கினர். இதையடுத்து முனிவர் மிகவும் கோப மடைந்தார்.

‘‘ஐந்தறிவு படைத்த அந்தக் குதிரைகள் கூட தங்களில் யார் பெரியவன் என்று சண்டை போடவில்லை. ஆனால், நீங்கள் விலங்குகளைக் காரணம் காட்டி சண்டை போடுகிறீர்கள். யார் குதிரை சிறந்தது என்று போட்டி போடுவதை விட, யாருடைய நாட்டில் மக்கள் அமைதியாக வாழுகிறார்கள் என்பது போன்ற நல்ல விஷயங்களுக்காகப் போட்டி போடுங்கள். அது உங்களுக்கும் நல்லது. உங்கள் குடிமக்களுக்கும் நல்லது’’ என்று முனிவர் அறிவுரை கூறினார். முனிவரின் அறிவுரை கேட்டு மன்னர்கள் இருவரும் மனம் திருந்தினர். மன்னர்களை ஆசீர்வதித்து விட்டுச்சென்றார் முனிவர்.

நன்றி : கோபால்,சுட்டிவிகடன்

------------------------------------------------------------------------------------------------

யார் பெஸ்ட்?!


காட்டில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. காட்டுக்குத் தலைவனான சிங்க ராஜாவுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதில் விலங்குகள் எல்லாம் மும்முரமாக இருந்தன. ஏனெனில், யாருடைய பரிசு சிங்க ராஜாவை மகிழ்விக்கிறதோ, அவரை தன்னோட ‘பெஸ்ட் ஃபிரண்டாக’ அறிவிப்பார்.

பட்டு வேஷ்டி கட்டிக்கொண்டு கம்பீரமாக தன் குட்டிகளுடன் ஒரு கட்டு கரும்பைத் தூக்கிக் கொண்டு யானை போனது.

ஒரு கூடை நிறைய ஆப்பிள்களுடன் டி&ஷர்ட்&ல் படு ஸ்டைலாகக் கிளம்பியது புலி.

ஜீன்ஸ் பேன்ட் போட்டுக் கொண்டு தேனாடையை பரிசாகக் கொண்டு சென்றது கரடி.

மணமணக்கும் பூங்கொத்துடன் அழகான சுடிதார் அணிந்து கொண்டு நளினமாகச் சென்றது மயில்.

இப்படி விலங்குகள் எல்லாம் பரிசுப் பொருட்களுடன் சென்று கொண்டு இருந்ததைப் பார்த்த குரங்கு குழம்பிப் போய் சோகமாக இருந்தது.

தன் எதிரியான மானை விட அமர்க்களமான பரிசு கொடுத்து சிங்கத்தை அசத்தி அதன் நண்பனாகி விடவேண்டும் என்பதே குரங்கின் குழப்பத்துக்குக் காரணம்! அடுத்து, மான் என்ன மாதிரியான பரிசு கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை மறைந்திருந்து பார்த்தது குரங்கு. தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தது மான். இதைப் பார்த்தவுடன் குரங்குக்கு ‘டக்’கென்று ஒரு பொறி தட்டியது. உடனே காட்டுக்குள் வேகவேகமாக ஓடியது. சிறிது நேரம் கழித்து... சிங்கத்தைப் பார்க்க சந்தோஷத்துடன் வந்திருந்தது குரங்கார்.

தன் பரிசுப் பொருளை சிங்கத்தின் முன் கொண்டு சென்று மூடியைத் திறந்தது. ‘‘தலைவா, இது ஸ்பெஷலான கோழி பிரியாணி. உங்களுக்காகவே ஸ்பெஷலாகச் செய்து கொண்டு வந்திருக்கிறேன்’’ என்று பெருமையாகச் சொன்னது குரங்கு. பிரியாணியின் மணம் காடு முழுவதும் கமகமத்தது.

‘குரங்கு தான் சிங்க ராஜாவோட பெஸ்ட் பிராண்ட் ஆகும்’ என்று மற்ற விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டன. இதைக் கேட்டு குரங்கு சந்தோஷப்பட்டது. கடைசியாக மான் கொண்டு வந்திருந்த வெஜிடபிள் பிரியாணியை ருசி பார்த்தது சிங்கம். இறுதியாக, ‘‘என்னோட பெஸ்ட் பிரண்ட் மான்!’’ என்றது சிங்கம். இதை சற்றும் எதிர்பாராத குரங்கு குழப்பத்துடன் சிங்கத்தைப் பார்த்தது.

‘‘குரங்காரே, எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் நீ கோழிகளை பிடிச்சு பிரியாணி பண்ணியிருக்கே. கோழிகள் எனக்காக லட்டு செஞ்சுட்டிருந்த நேரத்துல நீ அதை துன்புறுத்தி சாகடிச்சிருக்கே. ஆனா, யாரையும் துன்புறுத்த நினைக்காத மானம்மா, வெஜிடபிள் பிரியாணி செஞ்சு கொண்டு வந்திருக்கு’’ என்று விளக்கியது சிங்கம். தன் தவறை உணர்ந்து மானுக்கு வாழ்த்துச் சொன்னது குரங்கு.

நன்றி : ஜூலியட் மரியலில்லி

------------------------------------------------------------------------------------------------

ஆந்தையும் ஃபீனிக்ஸ் பறவையும்!!!


லியாங் என்ற நாட்டின் தலைமையமைச்சராக வெய்சு என்பவர் பதவியேற்றார். சில காலம் கழித்து ஷுவாங்சு என்பவர் அவரைச் சந்திக்க சென்றிருந்தார். பொதுவாகவே நம்மோடு இருக்கும் சிலர் அவர்களுடைய கருத்துக்களை நம்மிடம் சொல்லத்தானே செய்வார்கள்.

அப்படித்தான் வெய்சுவுடன் இருந்த ஒருவர், வெய்சு, இப்போது ஷுவாங்சு இங்கே வருவதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறாய், உன்னுடைய தலைமையமைச்சர் பதவியை பறித்து தான் தலைமையமைச்சராவதற்குத்தான் ஷுவாங்சு இங்கே வந்துள்ளார் என்று கூறினார்.

இதைக்கேட்ட வெய்சுவுக்கு கதி கலங்கிவிட்டது. அடடா, ஷுவாங்சு நம்மைவிட திறமைசாலி, நிச்சயம் மற்றவர் சொன்னது போல, நம் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்று உள்ளுக்குள் புழுங்கினான். சரி, முதலில் ஷுவாங்சுவை சந்தித்து பேசுவோம் என்று புறப்பட்டான்.

ஆனால் வெய்சு நகர் முழுதும் தேடியும் ஷுவாங்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆனதோ, ஏதானதோ என்ற குழப்பமும், பதிவி போனால் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமே என்ற கலக்கம் மறுபுறமுமாய் வெய்சு அலைந்து திரிந்தும் ஷுவாங்சுவை காணமுடியவில்லை. மூன்று நாட்கள் தேடி களைப்பானதுதான் மிச்சம்.

இறுதியில் ஷுவாங்சுவே வெய்சுவை சந்திக்கச் சென்றார்.தெற்கே ஃபீனிக்ஸ் என்ற ஒரு பறவை இருக்கிறது, அதை பற்றி நீ கேள்விப்பட்டதுண்டா? என்று வெய்சுவை நோக்கி வினவிய ஷுவாங்சு பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தார். இந்த ஃபீனிக்ஸ் பறவை தென் கடலிலிருந்து புறப்பட்டு வட கடல் நோக்கி பறக்கும். மிக அழகான சிறப்புமிக்க பாராசால் மரம் தவிர வேற் எந்த மரத்திலும் செடியிலும் சென்று அமராது. மூங்கில் பழங்களைத் தவிர்த்து வேறு எதையும் உண்ணாது. சுவையான சீர்சுனைகளில் தாகம் தணிக்குமே தவிர வேறு எந்த நீரையும் பருகாது.

இப்படி ஒரு நாள் ஃபீனிக்ஸ் பறவை வானில் பறந்துகொண்டிருக்கையில் கீழெ ஒரு ஆந்தை செத்து அழுகிப்போன ஒரு எலியை சாப்பிட தயராக இருந்தது. ஃபீனிக்ஸ் பறவை அந்தையை கடந்து சென்றபோது, ஆந்தை மேலே அண்ணாந்து பார்த்து ஃபீனிக்ஸ் பறவையை விரட்டும் தொனியில் சூ என்றதாம்.என்ன நீயும் உன் தலைமையமைச்சர் பதவியைக்கொண்டு என்னை சூ என்ற துரத்த பார்க்கிறாயா என்றாராம் ஷுவாங்சு. வெய்சு வெட்கி தலைகுனிந்தான்.

------------------------------------------------------------------------------------------------

மாற வேண்டாம்!


சந்தனக் காட்டின் முடிசூடா மன்னனான சிங்கத்தைப் பார்க்க ஓடோடி வந்தது அணில். ‘‘என்ன விஷயம் அணிலாரே?’’ என்று கம்பீரமாகக் கேட்டது சிங்கம். ‘‘ராஜாவே, நம் காட்டுக்குப் பக்கத்தில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களின் நடவடிக்கை களைப் பார்த்து நம் தோழர்கள் தங்களது குணம் மற்றும் பழக்கவழக்கங்களையே அடியோடு மாற்றிக் கொண்டு வருகின்றனர்’’ என்று தயங்கிய படியே சொன்னது அணில். ‘‘இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’’ என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டது சிங்கம். ‘‘முடியும் அரசே!’’ என்றது அணில்.

அணிலைக் கூட்டிக்கொண்டு காடு வலம் சென்றது சிங்கம். அங்கு ஒரு காகம், இறந்து கிடந்த ஒரு பல்லியை கொத்தி தின்று கொண்டிருந்தது. ‘‘அரசே! காகங்களின் இயல்பே கூடி சாப்பிடுவது தான். ஆனால், இங்கு ஒரு காகம் மட்டும் இரையை தனியாகச் சாப்பிடுகிறது. நம் காட்டில் வாழும் எல்லா காகங்களுமே இப்படி அடியோடு மாறி விட்டன’’ என்றது அணில்.

அப்போது திடீரென்று மழை தூறல் விழுந்தது. இருப்பினும், சிங்கமும் அணிலும் பயணத்தைத் தொடர்ந்தன. ‘‘அதோ, அந்த மரத்தடியில் பாருங்கள்’’ என்று சிங்கத்தின் கவனத்தைத் திருப்பியது அணில்.

ஒரு மரத்தடியில் எருமைகள் எல்லாம் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. ‘‘அரசே, எருமைகளின் குணமே மழையில் நனைவதுதான். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், கொஞ்சம்கூட அசையாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும். ஆனால், இப்போதோ சாதாரண மழைத்துளிக்குப் பயந்து மரத்தடியில் எல்லா எருமைகளும் நிற்கின்றன’’ என்று விளக்கியது அணில்.

இப்படி சென்ற இடங்களில் எல்லாம் மாற்றங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தது சிங்கம். காடு வலத்தை முடித்துக் கொண்டு தன் ஆலோசகர்களான நரியார் மற்றும் புலியாரிடம் பேசி ‘மறுநாளே எல்லா விலங்குகளும் பக்கத்துக் காட்டுக்குப் போவது’ என்றும் ‘அங்கு மனித நடமாட்டமே இல்லாமல் பார்த்துக் கொள்வது’ என்றும் முடிவு செய்தது.

இதைக் காட்டில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் தண்டோரா மூலம் அறிவிக்கச் செய்தது சிங்கம். மறுநாள்... காலை விலங்குகள் எல்லாம் தயாராக இருந்தன. ‘‘எல்லாரும் வந்து விட்டார்களா? இன்னும் யாராவது வர வேண்டியிருக்கிறதா?’’ என்று கேட்டது சிங்கம்.

‘‘அரசே, அன்னப்பறவை மட்டும் வரமறுக்குது’’ என்று பயத்துடன் சொன்னது அணில். ‘‘அன்னப்பறவையை அழைத்து வாருங்கள்’’ என்று மிகுந்த கோபத்தில் உத்தரவிட்டது சிங்கம். சிறிது நேரத்தில் அன்னப்பறவையும் வந்தது. ‘‘புதிய காட்டுக்குச் செல்ல உனக்கு என்ன தயக்கம்?’’ என்று கர்ஜித்தது சிங்கம்.

‘‘அரசே, என்னை மன்னியுங்கள். எனக்கு பசிக்கிறது. முதலில் எனக்கு பால் கொடுக்க உத்தர விடுங்கள்’’ என்று கோரிக்கை வைத்தது அன்னப்பறவை. சிங்கமும் உத்தரவிட்டது. அன்னப்பறவையும் பாலை வேகமாக உறிஞ்சிக் குடித்துவிட்டு நிமிர்ந்தது. ‘‘அரசே, எனக்கு வைக்கப்பட்டது சுத்தமான பால் அல்ல. அதில் அதிக அளவில் தண்ணீர் கலந்திருந்தது. இருப்பினும்,எனக்குத் தேவையான பாலை மட்டும் நான் குடித்தேன். தண்ணீரை அப்படியேவிட்டு விட்டேன்.அது போல்தான் மனிதர்களிடம் இருந்தும் நல்லதை மட்டும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே நம் தோழர்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றினாலே போதும். வேறு காட்டுக்குப் போவது என்பதுஅவசியம் இல்லாதது’’ என்றது அன்னப்பறவை.

அதைஏற்றுக் கொண்ட சிங்கம், மற்றவிலங்கு களுக்குப் பல புதிய உத்தரவு களைப்பிறப்பித்தது. அதோடு,அன்னப் பறவையை தன் கௌரவ ஆலோசகராகவும் நியமித்தது சிங்கம்!

நன்றி : கே.பி.ஜனார்த்தனன் சுட்டி விகடன்