14 December 2007

உள்ளச் சொத்து...

ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு குருவை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். தனக்கு மன நிம்மதியே இல்லை என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.‘‘குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிச்சுக்கறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம், அதுவரையும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் தெரியுதே, அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம் அது முழுதும் எனதுதான்’’ என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினான். ‘‘இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. இத்தனை வசதிகள் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு குருவே’’ என்றான்.குரு அவனை அமைதியாகப் பார்த்தார். ‘‘எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சேர்த்து வைத்திருக்கிறாயா?’’ என்று அவன் நெஞ்சைச் சுட்டிக் காட்டினார். பணக்காரனுக்குப் புரியவில்லை.‘‘அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் நிம்மதி தரும்’’ என்றார் குரு.

நீதி: உலகச் சொத்துக்களைவிட உள்ளச் சொத்து நிம்மதி தருபவை.

இருப்பதில் திருப்தி அடை!

குருவிடம் வந்தான் ஒருவன்.‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.‘‘அப்படியா?’’‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

சொல் புத்தி

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர். இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

நாடோடிக் கதை: சிங்கப்பூர்

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார். பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது. போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்? என்று கத்தினார். வழி இருக்கிறது என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்! என்றான். அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர். ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர். ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான் என்றார். அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், ஏமாற்றுக்காரர் களே என்று கத்திய அவள், உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன். என்றாள்.

பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு சிவப்பு மலை என்று பெயர் வந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் & இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!
ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார்.போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, ''ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது.தொழிலாளர்களுக்குப் பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், ''நான் உடனே சுவிட்சர்லாந்துல இருக்கணும்!'' என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர். தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்!துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், ''லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்'' என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது.பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, ''அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்'' என்றார்.

நீதி: எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்.

எல்லோருக்கும் கஷ்டம் உண்டு!

ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர். ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப்புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் பிள்ளைகள் சரியாகப் படிக்காததால், அவர் மிகவும் வேதனை அடைவார். தெய்வம் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கிறது? என்று நினைத்து, தெய்வத்திடம் போய் முறையிடுவார். அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. தெய்வத்திடம் தனிமையில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் என்ன? என்று நினைத்தார். அதன்படி, ஒரு நாள் பூஜையெல்லாம் முடிந்து கோயில் மூடப்படும்போது கோயிலுக்குள்ளேயே மறைந்துகொண்டார். அவருக்கு அசதியாக இருந்ததால், அங்கேயே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார். நடு இரவில் ஏதோபேச்சுக் குரல் கேட்டது. விழித்துப் பார்த்தார். அப்போது படிக்கட்டும் தூணும் பேசிக்கொண்டிருந்தன. அவர் அதை உற்றுக் கவனித்தார். அப்போது படிக்கட்டு தூணிடம் நாம் எல்லோரும் ஒரே பாறையாகத்தான் இருந்தோம். அங்கு வந்த கொத்தனாரும் சிற்பியும் பாறையைத்தட்டிப் பார்த்து, ‘இந்தக் கல்லைப் படிக்கட்டாகவும் இந்தக் கல்லைத் தூணாகவும் இந்தக் கல்லை சிலையாகவும் வடிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படி நம்மை உருவாக்கினார்கள். இப்போது நீ பரவாயில்லை, தூணாக நிற்கிறாய். நானோ படிக்கட்டாக மாறினேன் என்னை கோயிலுக்கு வருவோர், போவோர் எல்லோரும் மிதித்துச் செல்கின்றனர். என்னால் வலியைத் தாங்க முடியவில்லை... என்று கூறியது. அதற்குத் தூண், படிக்கட்டிடம் உனக்காவது பரவாயில்லை, மிதித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ஆனால், நானோ அப்படியல்ல.. எப்போதுமே இந்தக் கோபுரத்தைச் சுமந்துகொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன்.

நம்முடன் வந்து சிலையாக இருக்கிறதே, அதற்கு தினசரி பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று பலவிதமான அபிஷேகங்கள் செய்கிறார்கள். சிலை சந்தோஷமாக இருக்கிறது! என்று தூண் கூறியது. உடனே எங்கோ இருந்து மெதுவாக ஓர் அழுகைச் சத்தம் கேட் டது. அது சிலையின் குரல்தான். உடனே படிக்கட்டும் தூணும் சிலையைப் பார்த்து, நீதான் சந்தோஷமாக இருக்கிறாயே.. ஏன் அழுகிறாய்? என்று கேட்டன. உடனே சிலை, படிக்கட்டைப் பார்த்து உன்னை மிதித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். தூணோ, கோபுரத் தைத் தாங்கிக் கொண்டு நின்றுவிடுகிறது. ஆனால், என் நிலை... ஒவ்வொருவரும் வந்து ஒரு அபிஷேகம் செய்துவிட்டு, அவரவர் குறைகளை எல்லாம் சொல்லி என்முன் கண்ணீர் வடிக்கும்போது, ‘ஏன்தான் நாம் சிலையாக வந்தோமோ... மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? என்று தினமும் நான் வேதனையடைகிறேன். இதையெல்லாம் கேட்கக் கேட்க என்னால் தாங்க முடியவில்லை’’ என்று கூறியது. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜவுளி வியாபாரிக்கு அப் போது ஓர் உண்மை புரிந்தது.

நீதி : கஷ்டங்கள் என்பது இயற்கை. அதை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவதுதான் வாழ்க்கை என்பதே அது.

நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.ஒன்று மிகவும் நல்ல பண்பு,பாசம்,நேசம்,மனிதத்தன்மை,உண்மை போன்ற குணங்கள்.மற்றொன்று கோபம்,பொறாமை,பொய், தான்மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார்.அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன்.தாத்தா நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார்.

நீதி :நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

புலவரும் கஞ்சனும்ஒரு

ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது.பக்கத்து ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனைப் புகழ்ந்து பாடி பரிசுபெற்று வரலாம் என்று அவர் எண்ணினார். அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது.புலவர் அவனிடம் போனார். அவனைப் புகழ்ந்து சில பாடல்கள் பாடினர்.பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் பாடினார். அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் உற்சாகத்துடன் பாடினார். அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்' என்றான். இன்னும் கொஞ்சம் பாடினார். அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் பாட்டை முடித்துக்கொண்டார். பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் கொடுத்தான். புலவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே' என்றார். அதற்கு அவன் "புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய்தானே தருகிறேன் என்றேன். முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'எழு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். நீங்கள்தான் தப்பாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள்' என்றான், புலவருக்குப் பணக்காரனின் கஞ்சத்தனம் புரிந்தது. வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?

நமது நாடு இப்போதைய வேகத்திலேயே வளர்ச்சிப் பாதையில் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வறுமையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்’’ எனப் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது. இப்படிப் பேசுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திட்டக் கமிஷன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், ‘‘அடுத்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்’’ என நேரெதிரான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். உணவுக்கு உத்தரவாதமில்லாத நிலைமை உருவாகும் என எச்சரித்துப் பத்தே நாட்களில், ‘வறுமை பெருமளவில் ஒழிந்துவிடும்’ என்றால், எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் யார் என்று எப்படி சர்வதேசம் நிர்ணயக்கிறது ? இந்தியா அதனை எப்படி பார்க்கிறது?நாளன்றுக்கு ஒரு டாலருக்குக் கீழ், அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத்தான் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்தவித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். இருக்கிற புள்ளிவிவரங்களைத் தனது வசதிக்கு ஏற்ப அரசு பயன்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது (1995&96) கோபன்ஹேகனில் நடந்த ‘உலக வளர்ச்சிக்கான உச்சி மாநாட்’டில் இந்தியாவில் 39.9 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப் பதாக இந்திய அரசு தெரிவித்து, கூடுதல் நிதியுதவியை வேண்டியது. ஆனால், தேர்தல் நெருங்கிவந்த சூழலில் ஓட்டு வாங்கும் நோக்கத்தோடு, ‘இந்தியாவில் 19.5 சதவிகிதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். நாங்கள் வறுமையைப் பெருமளவில் ஒழித்து விட்டோம்’ என ஊடகங்களில் ஒரு பொய்யை அதே மத்திய அரசு அவிழ்த்து விட்டது!
அப்போது மட்டுமல்ல... இன்றும்கூட அதுவேதான் அரசின் நடைமுறை! கடன் வாங்குவதற்காக ஒரு புள்ளிவிவரம், ஓட்டு வாங்குவதற்காக வேறொன்று! ‘உலக பட்டினி அட்டவணை’யில் இந்தியா தொண்ணூற்று நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ சர்வாதிகாரத்தாலும், உள்நாட்டுப் போராலும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவைவிட நல்ல நிலைமையில் தமது குடிமக்களை வைத்துள்ளன என்று அந்த அட்டவணை சொல்கிறது. பட்டினியைக் குறைத்து வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பாதியைக்கூட இந்தியா எட்டவில்லை என்பதை 2007&ம் ஆண்டுக்கான ‘உலக பட்டினி அட்டவணை’ வெளிப்படுத்தியுள்ளது. பிரதமரின் ‘ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி’ என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளின் பின்னால் இருளில் பதுங்கியிருக்கும் உண்மை இதுதான்! அடையாள அட்டை அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால்கூட, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். உள்நாட்டுப் பாதுகாப்பு உட்படப் பலவிதங் களில் பயன்படக்கூடியது என்பதால் இந்த செலவு ஒன்றும் வீணானதல்ல. அட்டை தயாரிக்கும்போது நிர்வாக மற்றும் ஊழல் காரணங்களால் தவறான விவரங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்வதுதான்முக்கியம்! ‘வறுமையை ஒழிப்போம்’ என்று காங்கிரஸ் கட்சி வெகுகாலமாகவே சொல்லி வருகிறது. வறுமை ஒழியவில்லை... காங்கிரஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது. மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் இந்த வகையில் ‘காங்கிரஸ் பிரதமராக’ இல்லாமல், மனசாட்சியுள்ள அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு! குறிப்பு :சமுதாயத்தில் ஒரளவு உயர்வுப்பெற்ற(பணத்தாலும்,கல்வியாலும்) மக்கள் , தம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உதவ முன்வருவார்களாயின் , அரசுடன் சேர்ந்து நாமும் வெகு விரைவில் வறுமையை ஓழித்துவிடலாம்.--------------------------------------------------------------------------------
நன்றி திரு.ரவிக்குமார், ஜீ.வி

கட்டுரை - சிக்கனம்

சிக்கனத்தோடு வாழ்பவன் சிந்தனையோடு வாழ்பவன் என்பேன். சிக்கனம் என்பது வருவாய்க்கு தக்க படி செலவு செய்வது மீதியை சேர்த்து வைப்பது. சிக்கனமும் நேர்மையும் இணை பிரியா நண்பர்கள் போல.சிக்கனத்தோடு வாழ்பவனுக்கு பணத்தின் மற்றும் பிற பொருட்களின் அருமை தெரியும்.. அவன் தவறான வழியில் என்றும் செல்ல மாட்டான். சிக்கனமாக இருப்பவன் நிச்சயம் பிறர்க்கு உதவுவான் . இவ்விடத்தில் கஞ்ச தனம் பற்றி சொல்லி தான் ஆகா வேண்டும். கஞ்ச தனம் என்பது தானும் அனுபிவிக்காதுபிறருக்கும் கொடுக்காது பொருளை அழிப்பது.. ஆனால் சிக்கனக்காரன் அவ்வாறு இல்லாமல் பிறர்க்கும் உதவும் மனம் உடையவன்.. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தந்தை பெரியார் அவர்கள்.. சிக்கனமாக வாழ்ந்து பெண் கல்விக்கு உதவ கேட்ட பொழுது லட்ச கணக்கில் பணம் கொடுத்து உதவினார்.. நமது நாட்டில் எவ்வளவு முன்னேற்றம் இருப்பினும் வறுமை என்னும் பேய் தலை விரித்து ஆடி கொண்டு தான் இருக்கிறது.. "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" என்பது உண்மையே.. ஆனால் அத்துனை வளமும் பணக்கார வர்க்கமே உல்லாசமாக அனுபவிக்கிறது.. "ஆடம்பரம் ஆணவத்தின் வெளிப்பாடு.." பணம் படைத்தவன் சொர்க்கத்தை தன் சொந்தமாக்க ஏழையை வறுமை நரகத்திலியே வாட்டுகிறான். இன்றய சமூகத்தில் சிக்கனம் என்பது என் பார்வையில் என்ன என்றால், சில எடுத்துக்காட்டுகள்,ஒரு அறையை விட்டு அடுத்த அறை செல்லும் போது அவ்வறையில் உபயோகித்த மின் விசிறி, மின் விளக்கு ஆகியவையை அணைத்துசெல்வது*விலை குறைவாக உள்ளது என்று தேவை இல்லாத பொருட்களை வாங்கி குவிக்காமல் இருப்பது*நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளுக்கும், இடங்களுக்கும் வாகனங்களை உபயோகிக்காமல் இருப்பதுஇது போல சிறு விஷயங்களையும் சிந்தித்து சிக்கனத்துடன் வாழ்ந்தால் நிச்சயம் அடுத்தவரை பாதிக்காமல், பலனை தரும்.."நான் ஒருவன் மட்டும் சிக்கனத்துடன் வாழ்ந்தால், இந்தியா உயர்ந்து வல்லரசு நாடக மாறி விடுமா?" என்று பலரும் சந்தேக்கிறனர்.."நீ ஒருவன் செய், உன்னை பார்த்து இன்னொருவன் முயல்வான். சிக்கனமாக வாழ்வதும் கூட நம் இந்திய மண்ணிர்க்கு நாம் செய்யும் உதவி தான். நம் இந்தியாவில் வறுமை ஒழிய வழி வகுக்கும். இதோ இக்கட்டுரை உங்களிடம் கருத்துக்கள் பெற மட்டும் நான் எழுதவில்லை.. நான் சிக்கனத்தை கடைப்பிடித்து இந்தியாவை முன்னேற்ற சிறு உதவியை செய்வேன்.. தோழர்களே! நீங்களும் சிந்திப்பீர்கள் தானே?

நன்றி. தோழி தமிழச்சி புவனா

நட்பு

நட்பு என்பது உனது நண்பனிடம் உனக்கு ஏற்படும் ஒரு தனிச் சிறப்பான அக்கரை. இந்த அக்கரையை நாம் ஒரு வகையில் அன்பு என்று கருதலாம். பண்டைய கிரேக்கத்தில் தத்துவ ஞானிகள் நட்பை 3 விதமாக பார்த்தனர் :1) நாம் நட்பாக ஏற்றுக்கொள்ளும் நபர்களை பற்றி எந்த விதமான் முன் அனுமானமும் இல்லாமல், தன்னிலே ஒரு மதிப்பை உருவாக்கிக் கொண்டு ஏற்படும் நட்பு. அதாவது கிறித்துவ மரபுகள் பின்பு அனுசரித்ததைப்போல கடவுள் எல்லாவற்றையும் படைத்துள்ளார் நமக்காக சக மனிதர்களையும் படைத்துள்ளார். எனவே நாம் கடவுளை நேசிப்பது போல் மனித குலத்தையும் நேசிக்கவேண்டும் என்ற பொதுப்படையான அன்பு.2) நாம் நேசிக்கும் நபர்கள் இந்த மாதிரி இருக்கவேண்டும், அவரது நல்ல குணங்கள் கெட்ட குணங்கள், அவரது அழகு அல்லது அழகின்மை; தொடர்ந்து நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படுவதற்கான உணர்வு ரீதியான பிணைப்பு இவை அனைத்தையும் உறுதி செய்துகொண்டு அதனடிப்படையில் தொடரப்படும் நட்பு. அதாவது இதில் பாலியல் ரீதியான உறவையும் சேர்த்தே கிரேக்க தத்துவ சிந்தனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே காதல் என்பதையும் காமம் என்பதையும் சேர்த்துக் குறிக்கும் ஈராஸ் என்ற வார்த்தையை இத்தகைய உறவுகளை வர்ணிக்க பயன்படுத்துகின்றனர்.3) மூன்றாவது வகையான நேசம் நட்பு மட்டுமல்லாது ஒருவரது குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் நேசம், வர்த்தக கூட்டாளிகளிடையே ஏற்படும் நெருக்கம், மேலும் விஸ்தாரமாக ஒருவர் தனது நாட்டையும் பிறந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பது.நேசம் குறித்த இந்த பாகுபாடுகளில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை... இதெல்லாம் இல்லமலேயே ஏற்படும் சுதந்திரமான நட்பு பற்றி கிரேக்க சிந்தனையாளர்கள் யோசிக்கவில்லை. பெரும்பாலும் இந்த கிரேக்க சிந்தனை மரபிலேயே வந்த தத்துவ ஞானி அரிஸ்டாடில் தன்னுடைய எதிக்ஸ்(ஒழுக்கம்) என்ற நூலில் நட்பு பற்றி குறிப்பிடத் தகுந்த விஷயங்களை அலசுகிறார்... இவரும் ஒரு 3 வகையான நட்பு பற்றி பேசுகிறார்...1) சுக போகங்களுக்காக இணையும் நட்பு2) பயன் கருதி இணையும் நட்பு3) ஒழுக்கம், நேர்மை, நற்பண்புகளில் ஈர்க்கப்பட்டு இணையும் நட்பு.இதுதான் அரிஸ்டாடிலின் நட்பு பற்றிய 3 அடிப்படை பிரிவுகள்.அதாவது நாம் ஒரு நண்பனை அவனால் நமக்கு கிடைக்கும் மகிழ்சிக்காக விரும்பலாம். அல்லது அவனால் நமக்கு கிடைக்கும் பயன் கருதி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் 3வது நட்பு மிக முக்கியமானது. ஒருவரின் நேர்மை, ஒழுக்க குணம், அவரது நல்ல நடத்தை மற்றும் இன்ன பிற உயர்ந்த மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு நட்புறவு பிணைக்கப்படுவது.3வது வகை நட்பு சிறந்தது. ஏனெனில் முதல் இரண்டு வகையிலும் நாம் நம்முடைய சந்தோஷம், நமகான பயன் கருதி ஒருவரிடம் பழகுவது, ஆனால் 3வது வகை நட்பு மற்றவரின் குண நலன் மீது ஏற்படும் மன ஈர்ப்பின் காரணமாக உருவாகும் உண்மையான நட்பு. ஆம்... அரிஸ்டாடில் அப்படித்தான் கூறினார். இந்த வகை நட்பில் அவரிடமிருந்து பொருள் சார்ந்த எதிர்பார்ப்பு இல்லை. அதனால் ஏற்படும் போலித்தனங்கள் இல்லை. நாம் நம் அறிவால் ஒருவரிடம் கண்டுணரும் குண நலன் மீதான ஒரு நட்பு, அந்த நபர் மீதான அன்பாக மாறுகிறது.எனவே உணர்ச்சிப் பூர்வமான நட்பு என்பது பல மகிழ்ச்சிகளை நமக்கு கொடுக்கலாம். அதெல்லாம் உடல், மன வருப்பங்களைச் சார்ந்தது... ஆறறிவால் உணரும் நட்பே நீண்ட காலம் நிற்க கூடியது.

இணையத்திலிருந்து தொகுப்பு

மனித நேயம் எங்கே

முன்னொரு காலத்தில், சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.புதிய மன்னர் பதவியேற்கப் போவதையொட்டி, அரண்மனையில் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாகவே ஓர் ஓவியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்த மரப்பல்லி ஒன்று இனி எங்கே போவது என்று தெரி யாமல், அங்குமிங்கும் ஓடி கட்டிலின் அடியில் போய் ஒட்டிக்கொண்டது. கட்டிலில் வஸ்திர அலங்காரம் செய்ய வந்தவன், கவனக்குறைவால் பல்லியோடு சேர்த்து ஒரு ஆணியை அடித்துவிட்டான். பல்லி வலி தாங்க முடியாமல் கத்தியபோதும், அது தன் இருப்பிடத்தை விட்டு நகரவே முடியவில்லை. பல நாட்களாக அந்தப் பல்லி கத்திக்கொண்டு இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவேயில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அரசர் கட்டிலின் திரைச்சீலையை மாற்றச் சொன்னபோது, ராணி தற்செயலாக கட்டிலின் அடியில் ஆணியில் அடிபட்டு ஒரு பல்லி மெலிந்துபோய் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டு மன்னரிடம் காட்டினாள். மன்னர், ‘ஐயோ பாவம்!’ என்றபடியே, எப்படி இந்தப் பல்லி இத்தனை நாட்களாக உயிரோடு இருந்தது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது உத்திரத்திலிருந்து இன்னொரு பல்லி இறங்கி வந்து, தன் வாயில் கவ்விக்கொண்டு வந்திருந்த இரையை, ஆணியில் மாட்டிக்கொண்டு இருந்த பல்லியின் வாயில் புகட்டிவிட்டுப் போவதைக் கண்டார். அவரால் நம்பவே முடியவில்லை! உயிருக்குப் போராடிய பல்லியை இன்னொரு பல்லி உணவளித்துக் காப்பாற்றி இருக்கிறது. இயற்கையில் ஒரு உயிரைக் காப்பாற்ற, பல்லிகூட தன்னால் ஆனதைச் செய்கிறது. மனிதராகிய நாமோ, அடுத்தவர் உணவைப் பறித்தும், அதிகாரம் செய்தும் வருகிறோமே என்று மனமாற்றம் கொண்டார் அந்த மன்னர் என்று சீன சரித்திர குறிப்பேடு சொல்கிறது. நடந்தது உண்மைச் சம்பவமோ, கற்பனையோ... எதுவாக இருப்பினும், உயிர்ப் போராட்டத்தில் ஒன்றையொன்று சார்ந்தும் உதவியும் பகிர்ந்தும் வாழ்வதுதான் இயற்கையின் அற்புதம். அந்த அக்கறையும் நேசமும்தான் மனிதனின் அடிப்படை உணர்வுகள்! இன்று நாம் மறுப்பது சாப்பாட்டை மட்டுமல்ல; சக மனிதன் மீதான நமது அக்கறையையும்தான்! நன்றி : ஆனந்தவிகடன்

உன்னையே நீ அறிவாய்!

‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடைபெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ். சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும் சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல் தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம் கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத் தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி, ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால் பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய் வேகவேகமாக நடக்கத் துவங்கினார். விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள் நடுங்கின. குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல், அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப் படுத்துக்கொண்டார். சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!

முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் ஆபிரகாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், ‘‘உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்’’ என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரகாம் மட்டும் பேசாமல் நின்றார்.‘‘ஆபிரகாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?’’ எனப் பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், ‘‘நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்’’ என்று உறுதியான குரலில் சொன்னார் ஆபிரகாம். ‘‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என, புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.1809 ம் வருடம், அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்குத் தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தாலும், காய்கறி போல மனிதர் கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்குள் ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்ததும், அவசரமாக தனது 22&வது வயதில் ஒரு நகராட்சித் தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்கி, படு தோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் பெரும் கடனாளியாக மாறியிருந்தார். சோர்ந்துபோயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள். நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத் தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச் சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தைச் சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப் படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, 1834 ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின், நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப் பினர், உப ஜனாதிபதி என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு, சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்தித்து, 1860 ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத் தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்.இல்வாழ்விலும் அவருக்குத் தோல்வி கள்தான்! 1835 ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33&வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து, நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று பேர் சிறு வயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந் தது. இத்தனைத் தோல்வி களையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி யானதும், அதிரடி நடவடிக்கை எடுத்து, அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865&ல் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறி யனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது ஆபிரகாம் லிங்கனுக்கு மட்டுமல்ல... நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாகப் போராடும் ஒவ்வொருவருக்கும் அது வெற்றித் திருமந்திரம்!

எஸ்.கே. முருகன், விகடன்-