11 May 2010

திருட வந்தவர்களுக்கு கூலி!

சிறுதாவூர் என்ற கிராமத்தில் ராமன் என்ற அதி புத்திசாலி வாழ்ந்து வந்தார். வணிகம், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதிலும், வழக்குகளில் சரியான தீர்ப்புகள் கூறுவதிலும் வல்லவர், கோடைக்காலத்தில் ஒருநாள், ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு திருடர்கள் மெதுவாக தோடத்துக்குள் நுழைந்து செடிகளுக்குப் பின் மறைவதை ராமன் பார்த்து விட்டார்.

சுதாரித்துக்கொண்ட அவர் தன் மனைவியிடம் மெதுவாக, "நம் வீட்டில் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்." என்று கூறவே, "ஐயோ திருடர்களா.. இப்போது என்ன செய்வது?" என்று அவர் மனைவி பதறினார்.
உடனே, "கத்தாதே..திருடர்களை எளிதாக பிடித்து விடலாம். நான் சொல்வதை மட்டும் செய்." என்று கூறினார்.
என்ன செய்ய வேண்டும் என்று தன் மனைவிக்கு கூறிய பின், திருடர்கள் பதுங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சென்றார் ராமன்.

பின் சத்தமாக தன் மனைவியிடம், "தெரியுமா சேதி...அடுத்த தெருவில் கந்தசாமி வீட்டில் திருடு போய்விட்டதாம். நாம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே நகைகள், பொற்காசுகள் அனைத்தையும் கொண்டு வா." என உத்தரவிட்டார். இதைக் கேட்ட திருடர்கள் குழம்பினர். ராமன் என்ன செய்யப் போகிறார் என உன்னிப்பாக கவனித்தனர். ராமனும் அவரது மனைவியும் சேர்ந்து பெரிய பெட்டியைக் கொண்டு வந்தனர். அதை தங்கள் கிணற்றில் வீசினர். பின்னர், "அப்பாடா, இனி கவலையில்லை, திருடர்கள் வந்தால் வீட்டில் பொருட்களைத் தேடிப் பார்த்து விட்டு ஏமாந்து திரும்புவார்கள். நாம் நிம்மதியாக தூங்கலாம் வா!" என தன் மனைவியிடம் சத்தமாக கூறி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் ராமன்.

இந்தக் காட்சியைக் கண்ட திருடர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அவர்களில் ஒருவன், "சத்தம் போடாமல் இங்கேயே இருப்போம். இரவு அவர்கள் தூங்கியவுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி விட்டு பொருட்களை எடுத்துச் சென்று விடுவோம்," என்று மகிழ்ச்சியாக கூறினான்.

இரவு நேரமானதும், இரண்டு பேரும் கிணற்றுக்கு அருகில் சென்று ஓசைப்படாமல் குடத்தில் கயிறு கட்டி தண்ணீரை வெளியேற்றி தோட்டத்தில் ஊற்றினர், நீண்ட நேரம் தண்ணீரை வெளியேற்றிய போதும், கிணற்றில் தண்ணீரின் அளவு குறையாததால் வெறுப்படைந்தனர். ஆனாலும் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.
பொழுதும் விடிந்து விட்டது. இரவெல்லாம் தண்ணீர் இறைத்ததால் எழுந்து நிற்கக் கூட சக்தியின்றி இருவரும் அப்படியே விழுந்து கிடந்தனர்.


அவர்களிடம் சென்ற ராமன், "நண்பர்களே, வெறும் கற்கள் நிரம்பிய பெட்டிக்காக இரவெல்லாம் கண் விழித்து என் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றியுள்ளீர்கள். உங்களுக்கு நான் எவ்வளவு கூலி தர வேண்டும்?" என சிரித்துக் கொண்டே கேட்டார்.


உடனே அவர் கால்களில் விழுந்த இருவரும், "ஐயா, தெரியாமல் உங்கள் வீட்டில் திருட வந்து விட்டோம். இரவு முழுவதும் தண்ணீர் இறைத்ததால் உழைப்பின் அருமையை இப்போது உணர்ந்தோம். இனி திருட மாட்டோம். எங்களை மன்னித்து விட்டு விடுங்கள்." என கெஞ்சினர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, தண்ணீர் இறைத்ததற்காக கூலி கொடுத்து அனுப்பி வைத்தார் ராமன்

பொறுத்தார் பூமி ஆள்வார்’

பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? பொறுமையாயிருப்பவர்களுக்கு பூமியையே ஆளும் பாக்கியம் உண்மையில் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பொறுமை இல்லாதவர்களுக்கு, அதிர்ஷ்டம் வராது என்பது தான்உண்மை!


அரேபிய இரவுகளில் ஒரு கதை உண்டு. கெய்ரோவைச் சேர்ந்த ஓர் இளைஞன் மிகுந்த ஏழையாக இருந்தான். அவனுடைய முன்னோர்கள் செல்வந்தர்களாக இருந்தனர். ஏழைமையில் வாடிய அவன் ஓர் இரவில் ஓர் அதிசயக் கனவு கண்டான். கனவில் ஒரு குரல் “பாக்தாத்துக்குச் செல்! அங்கே உனக்காக அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!” என்றது. மறுநாளே அந்த இளைஞன் பாக்தாத்தை நோக்கிக் கிளம்பி விட்டான். பயணம் செய்து களைத்துப் போனதால், நடுவில் ஒரு மசூதியில் தங்கி ஓய்வெடுத்தான்.


அன்று இரவு, சில கொள்ளைக்காரர்கள் அந்த மசூதியில் தாங்கள் திருடிய பொருட்களுடன் ஒளிந்து கொள்ள, அவர்களைத் துரத்தி வந்த காவலர்கள் மசூதிக்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்தனர். அவர்களுடன் அந்த இளைஞனும் கைது செய்யப்பட்டான். விசாரணையின் போது அவனைக் குற்றமற்றவன் என்று தெரிந்து கொண்ட காவலர் தலைவன், அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.

ளைஞன் தன்னுடைய கனவை விளக்கினான். அதைக்கேட்டு சிரித்த காவலர், அவனைத் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். தலைவன், “நான் கூடத்தான் பல ஆண்டுகளாக அப்படிப்பட்ட ஒரு கனவு காண்கிறேன். என் கனவில் வரும் குரல் “உடனே கெய்ரோவிற்குப் போ! அங்கு பனைமரத்தின் கீழ் உள்ள வற்றிய கிணற்றில் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்கிறது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நீ ஒருமுறை கனவு கண்டு, அதை நம்பி விட்டாய்” என்றான்.


அடுத்த நாள் மாலை, இளைஞன் பாக்தாத் நகரை அடைந்தான். நகர்க் காவலன் இளைஞனைக் கண்டு சந்தேகித்து அவனைக் காவல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றான். அவரிடமும் இளைஞன் தன் கனவைப் பற்றிக் கூற, அவரும் சிரித்துக் கொண்டே “பத்து ஆண்டுகளாக நானும் ஒரு கனவு காண்கிறேன். ஒரு குரல் “கெய்ரோவிற்குச் செல்! அங்கே ஒரு வீட்டில் நான்கு வாயில்களில் மூன்று மூடப்பட்டிருக்கும். வீட்டின் மேற்கு மூலையில் ஒரு பனைமரத்தின் கீழ் வற்றிய கிணற்றினுள் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. போசாமல் நீ உன் ஊருக்குச் செல்!” என்றார்.


உடனே அந்த இளைஞன் தன் ஊரான கெய்ரோவை நோக்கி விரைந்தான். அந்த அதிகாரி குறிப்பிட்ட புதையலின் இருப்பிடம் அவனது வீடுதான். அவன், வீட்டை அடைந்து கிணற்றைத் தோண்ட, புதையலும் கிடைத்தது. தன்னிடம் இருந்த புதையலைக் கொண்டு பெரிய பரப்பளவுள்ள நிலம் வாங்குவதில் மும்முரமாக இருந்த அவன், ஒரு வயதானவரை நாடிச் சென்றான்.

தன்னிடமுள்ள பெரிய நிலத்தை விற்க முன் வந்த அந்தப் பெரியவர் இளைஞனிடம், “என்னுடைய முன்னோர்கள் இந்த நிலத்தில் மிக மதிப்பு வாய்ந்த புதையல் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் அதை நம்பவில்லை. இனிமேல் புதையல் கிடைத்தும் எனக்கு பயனில்லை. அதனால் இதை உனக்கு விற்கிறேன். அவசரப்பட்டு இதை நீ உடனே விற்று விடாதே” என்றார்.



ஆனால் லாபம் ஈட்டுவதில் குறியாக இருந்த அந்த இளைஞன், நிலத்தின் விலை ஏறியவுடன் அதை நல்ல லாபத்திற்கு விற்றான். அதற்கு அடுத்த ஆண்டே, அந்த நிலத்தில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு நடந்த முயற்சியில், வைரச் சுரங்கமே இருப்பது தெரிந்தது. அந்த நிலத்தை விற்ற இளைஞன், தன் அவசர புத்தியை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானான், அடுத்த் சில ஆண்டுகளில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையின் பிடியில் சிக்கி இறந்தான்.

தமிழ் நகைச்சுவை

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'

-----------------------------------------------------------------------------------------------

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?

நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்

-----------------------------------------------------------------------------------------------
''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

-----------------------------------------------------------------------------------------------
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

-----------------------------------------------------------------------------------------------

courtesy: tamiljokes4u