10 April 2009

'என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...'' வன்னிக் காட்டில் பிரபாகரன் சபதம்?


சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன.

தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம்.
''ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான்
புலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளின் கவனம் ஈழத் துக்கு ஆதரவாகத் திரும்பியும் இந்தியாவின் தலையீடு இருந்ததால், போர்நிறுத்தம் சாத்தியமற்றுப் போனது. அதனால் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்கும் வண்ணம், புலிகள் ஊடறுப்புத் தாக்குதலைக் கையிலெடுக்கத் தொடங்கினார்கள். இதில் சிங்கள ராணுவத்தினர் சிதறுண்டுபோனார்கள். ஆனால், போர் நிறுத்தத்துக்கு பதிலாக வெளிநாடுகளின் உதவியோடு கொடூர ஆயுதங்களைக் கொண்டுவந்து குவித்து, புதிய வியூகங்களை வகுத்துச் செயல்படத் தொடங்கிவிட்ட சிங்கள ராணுவம், கடந்த இரண்டுவாரங்களாக இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி படுஉக்கிரமான தாக்குதலை நடத்திவருகிறது. இந்தியாவின் ஆயுதங்களை சரிவரப் பயன்படுத்த இலங்கை ராணுவத்தினருக்குத் தெரியாததால்... இப்போது இந்திய ராணுவத்தினரே போரில் குதித்துவிட்டார்கள். அதனால் ஈழப் போராட் டம் இன்னும் சில நாட்கள்கூட நீடிக்காது. முப்பதாண்டு காலமாக ஆயுதமேந்திப் போராடிய புலிகள் மடிகிற காலம் வந்துவிட்டது...'' என இலங்கை நிலவரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார்கள்.
பொறியில் சிக்கிய புலித் தளபதிகள்!
அவர்களே தொடர்ந்து பேசும்போது, ''கொடூரமான ஆயுதங்கள் கைக்கு வந்தவுடனேயே அசுரப் பாய்ச்சலால் புலிகளின் கைவசமிருந்த இரணைப்பாலை, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேறிய ராணுவத் தரப் பினர், புலிகளின் முக்கியத் தளபதிகளான கேணல் பானு, கேணல் லாரன்ஸ் ஆகியோரை உயிரோடு பிடிக்கத் திட்டமிட்டனர். பிரபாகரனின் அபிமானம் பெற்ற இந்த இருவரையும் உயிரோடு பிடித்தால், சித்ரவதை செய்து பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்று கணக்குப் போட்டது ராணுவம். அதன்படி, ராணுவத்தின் முக்கியஸ்தர்களான பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமையில் 58-வது டிவிஷனும், கேணல் ரவிப்பிரியவின் தலைமையில் 68-வது டிவிஷனும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையில் 53-வது படையணியும் ஒருசேர வியூகம் வகுத்தன. அதன்படி, புலித் தளபதிகளின் உணவு விநியோகப் பாதைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. ஒரே நேரத்தில் புலிகளின் முக்கியத் தளபதிகளைக் குறிப்பிட்ட வளையத்துக்குள் கொண்டுவந்து, நான்கு முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ராணுவம். எப்போதுமே பல கூறுகளாகப் பிரிந்து போர் செய்யக் கூடிய புலிகளின் தளபதிகள், ராணுவத்தின் சூழ்ச்சிக்கு இலக்காகி... அம்பலவன்பொக்கனை சந்திப்பை மட்டும் பயன்படுத்தி ஒரே குழுவாகினர். அந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் வலிமை வாய்ந்த விஜயா காலாட்படையும், கஜபா ரெஜிமென்ட் படையும் கைகோத்து, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் புலிகளையும் அவர்களின் தளபதிகளையும் மடக்கினர். கடைசி நேரத்திலேயே இந்த சூழ்ச்சி புலிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. அடுத்தகணமே அவர்கள் கடுமையான தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பானு, லாரன்ஸ் உள்ளிட்ட தளபதிகளை உயிரோடு பிடிக்க நினைத்த சிங்கள ராணுவத்தினர், தாக்குதல் நடத்தாமல் புலிகளை சரணடையும்படி வேண்டினர். ஆனாலும், உயிரோடு பிடிபட்டால் என்னாகும் என்பது தெரிந்து புலிகளும் தளபதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். பதினாறு மணி நேரம் இரு தரப்புக்கும் தொடர்ந்து நடந்த தாக்குதலில் சில தளபதிகளும் சில புலிகளும் மட்டுமே தப்பிக்க முடிந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் புலித் தளபதிகளும் மொத்தமாகக் கொலையான விஷயம் அடுத்த நாள் காலையில்தான் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியவந்தது...'' என்று புலிகளின் பின்னடைவு குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.
''என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...''
இலங்கை அரசு மற்றும் ராணுவத் தரப்பில் விசாரித்தபோது, ''இலங்கையில் இதுநாள் வரை சவாலாக இருந்துவந்த ஒட்டுமொத்தப் புலிகளையும் ஒடுக்கி விட்டோம். பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார். 'இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது...' என்று சபத மிட்டுச் சென்றிருக்கிறார். கூடவே, 'இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை...' என்றும் சொன்னவர், இந்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். இருந்தாலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம். அவருடைய மகன் சார்லஸ் ஏற்கெனவே எங்கள் தாக்குதலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். பிரபா கரனின் மற்ற பிள்ளைகளும் மனைவியும் லண்டன் போய்விட்டார்களாம். விரைவில் அவர்களையும் பிடிப்போம். இனி புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது... அதற்கு பிரபாகரன் ஜாதகமே சாட்சி. சமீபத் தில் பிரபாகரனின் ஜாதகம், போட்டோ ஆல்பமெல்லாம் அவர் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டபோது சிக்கியது. அந்த ஜாதகத்தை வைத்துக் கணித்ததில் பிரபாகரனுக்கு உடல்ரீதியாகப் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது...'' என்கிறார்கள்.
வருமா வணங்கா மண்?
ஈழத்தில் பசியாலும் காயங்களாலும் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு உதவும் விதமாக பிரிட்டனில் இருந்து 'வணங்கா மண்' என்ற கப்பல், உலகத் தமிழர்கள் திரட்டிக் கொடுத்த பொருட்களோடு கடந்த சில தினங்களுக்கு முன் முல்லைத்தீவுக்குக் கிளம்பியிருக்கிறது. பிரிட்டன் எம்.பி-க்கள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையின் கொடூரத்தையும் அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்தையும் வெளிப்படையாகவே பேசி 'வணங்கா மண்' பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையின் கடற்படை அதிகாரிகளோ, 'வணங்கா மண் கப்பல் புலிகளுக்குச் சொந்தமானது. அதனால் எக்காரணம் கொண்டும் அதை வன்னிக்கு வரவிட மாட்டோம். மீறி அந்தக் கப்பல் வந்தால்... அதன் மீது சரமாரி தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்!' என பகீர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.


நன்றி
விகடன்