29 April 2009

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள்

நான் 21 -ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறேனா என்ற சந்தேகமும், அது உண்மை என்றால் இனி தமிழ் இனத்திற்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி பயமும் வருகிறது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தமிழக அரசியல் வாதிகள் தன சொந்த இன மக்களின் தன உறவுகளின் ரத்தத்தை சுவைக்கும் மிருகங்களாவே மாறி விட்டதை பார்க்கும் போது எண்டா தமிழ் நாட்டில் பிறந்தோம் என்று மிகவும் வருத்த படுகிறேன். இத்தனை கொடுமைகளையும் பார்த்து கொண்டு என்னாலும் எதுவும் என் மக்களுக்கு செய்ய முடிய வில்லையே என்று எண்ணும் போது இயலாமையில் அழுகை மட்டுமே வருகிறது.

தமிழ் நாட்டிலோ அல்லது புலம் பெயர் மக்கள் சிந்துவதோ அல்லது சிந்த விரும்புவதோ வெறும் கண்ணீரை மட்டுமே ஆனால் ஈழத் தமிழர்கள் நாள் தோறும் சிந்துவதோ இவ்வளவு கொடுமையிலும் விடுதலை வேட்கை அடங்காத சிறுதும் சீற்றம் குறையாத தன ரத்தத்தை. யோசிப்பீர்களா நாற்காலி வெறி பிடித்த நயவஞ்சகர்களே !!!

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் அதிர்வின் Report
பிரசுரித்த திகதி : 29 Apr 2009

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம். உண்ர்ச்சி மிகு அதிர்வு வாசகர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

மிக கொடுமையான அந்த படங்களை காண

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1240995334&archive=&start_from=&ucat=3&

21 April 2009

சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்

நாங்கள் சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்: விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.
அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார்.
"நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது" எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய புலித்தேவன், "நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விசயத்தில் தலையிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
சிங்களப்படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துமிருப்பதாகவும் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், எம்முடன் இணைந்தும் போராடுகின்றனர். ஏனென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகத்தான் போராடுகின்றது" எனவும் தெரிவித்த புலித்தேவன், "அதனால்தான் அவர்கள் சுயவிருப்புடன் எமது அமைப்பில் இணைந்து போராடுகின்றனர்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

courtesy: nakeeran

இலங்கையில் இரத்த ஆறு

இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த ஒரு சில மணி நேரமே உள்ளது

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்துவிட வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கும் நிலையிலேயே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை மகிந்த அறிவிக்கா போதிலும், "ஒரு இரத்த ஆறு ஓடலாம் என நாம் கவலையடைந்திக்கின்றோம்" என நியூயார்க்கை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்வாளரான அனா நிஸ்டால் தெரிவித்திருக்கின்றார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்த்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணி நேரமே உள்ளது என அவர் வாசிங்டனில் உள்ள புரூக்கிங்க்ஸ் நிலையத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
"தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றங்களாகக் கருதப்படும் என்பதையும், இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள், தளபதிகள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

courtesy: nakeeran

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் வழியாகவும் உள்ளே புகுந்துள்ளனர்.
தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படையினர் முயற்சித்துள்ளனர்.
அதேவேளையில் முன்னணிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இந்தப் பொதுமக்களையே படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனை எதிர்க்க முனைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளின் போது சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தொடக்க கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20.04.09) ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 வரையிலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இன்றும் இந்த நிலை தொடர்கின்றது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் உள்ள 2 ஆயிரம் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குமாறும் கப்பல் மூலமாக அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தொகையானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதால் உடனடியாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமானதாகியுள்ளது.
புதுமாத்தளன் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டதால் புதிய தளம் ஒன்றில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் வந்து செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது.
மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மக்களைப் பயன்படுத்துவதும் கடுமையான போர்க் குற்றங்கள் என்பதுடன், இந்த மனிதப் படுகொலைக்குக் சிறிலங்கா அரசாங்கமும், ஆயுதப் படைகளின் தளபதிகளுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகும்.
இந்த போருக்குள் அகப்பட்டுள்ள தமிழ்ப் பொதுமக்களை மீட்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்தப் போர்க்குற்றங்கள் மிகவும் கடுமையானவை எனக்கருதும் விடுதலைப் புலிகள், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசரமான அனைத்துலக ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும் கருதுகின்றது.
கடுமையான போர்க்குற்றங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினையை எதிர்கொள்ளத்தக்க விதமாகச் செயற்படுமாறும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

courtesy: nakeeran

16 April 2009

ஈழத்தில் ஷாக்கிங் ஏஜெண்ட்!

ம்பலன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்த ளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க... மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா?

தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், சில சொச்சமாவது மிஞ்சுமா என்ற கேள்விதான் ஐ.நா. வரை கேட்கிறது. யார் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் சிங்கள அரசாங்கம் இல்லை. இலங்கையைத் துண்டாடும் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமாக' ஆரம் பிக்கப்பட்ட மகிந்தாவின் தாக்குதலில், கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 77 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சொல்கிறார்.

'புலிகளைத்தான் கொல்கிறோம், பயங்கரவாதிகளைத்தான் தாக்குகிறோம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தப் போகிறேன்' என்று மகிந்தா சொல்வதன் அர்த்தம்... யாருமில்லாத மயான அமைதியா?

கடந்த அக்டோபர் 14-ம் தேதி 'போர் நிறுத்தம் தேவை' என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம் நிறை வேற்றினார் முதல்வர் கருணாநிதி. அன்று முதல் இந்த வாரம் வரை மட்டும் 8 ஆயிரம் தமிழர்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 15 ஆயிரம் பேர் ஊனமானார்கள். புலிகளைச் சண்டை போட்டுக் கொல்ல முடியாமல் வானத் தில் இருந்து குண்டுகள் போட்டு மக்களைக் கொல்வதை ஐ.நா. சபையில் ஆரம்பித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் சொன்ன பிறகும் சாவும் நிற்கவில்லை... சண்டையும் நிற்கவில்லை.

கடந்த 8-ம் தேதி மட்டும் 189 பேர் கொல் லப்பட்டார்கள். போர் சூழ்ந்த புதுக்குடியிருப்புப் பகுதியில் இயங்கும் தொடக்கச் சுகாதார நிலையத்தில் பால் மாவு வாங்க நின்றிருந்த தமிழ்க் குடும்பங்கள் தலையிலும் குண்டு இறங்கியது. கற்பகநாதன் கஜீபன் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையும், யோசேப் மார்த்தம்மா என்ற 76 வயது பாட்டியும் பலியானார்கள். ஆர்ட்டிலறி எறிகணைகள், பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை, தொலை தூரத் துப்பாக்கி. ஆகிய ஐந்தும்தான் ஆரம்பத்தில்! கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரஸூம் சில மாதங்களுக்கு முன் வந்தன. இப்போது... ரசாயன குண்டுகள். இதற்கு 'ஷாக்கிங் ஏஜென்ட்' என்று பெயராம்!

கடந்த 4-ம் தேதி மிகப் பெரிய தாக்குதலுக்குப் புலிகள் திட்டமிட்டு ஓர் இடத்தைத் தாண்டி இன்னோர் இடத் துக்கு இடம்பெயர்ந்துகொண்டு இருந்ததாகவும், அதை ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர், அந்த இடத்தை நோக்கி இந்த ரசாயனப் புகையைக் கிளப்பியதாகவும் தகவல். புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதிகளாக இருந்த தீபன், விதுஷா உள் ளிட்ட 127 பேர் இறந்துபோனார்கள். இதே தாக்கு தலில் 1,300 தமிழர்களும் பலியாகி இருக்கிறார்கள். தமிழர்களை இனி ஒட்டுமொத்தமாகக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் முறை இதுதான்.

''இந்த வகையான ரசாயனக் குண்டுத் துகள்கள் தோலில் பட்டதும், அந்த இடத்தில் கொப்புளம் வரும். உடனே அவை வெடிக்கும். உடம்பு முழுக்க இது போன்ற கொப்புளங்கள் வந்து வெடித்து ரசாயனங்கள் உள்ளே போய் உயிரைப் பறிக்கும். முன்பெல்லாம் ரசாயனக் குண்டுகளின் புகைகள் மூச்சுக்காற்று வழியாக உடம்புக்குள் போய் உயிரைப் பறித்துவிடுவதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து தப்பிக்க மாஸ்க் வந்துவிட்டது. அதையும் புலிகள் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இப்போது தோலைத் தாக்கும் ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன'' என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து இலங்கை மனித உரிமை அமைப்புகள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளன.

பூநகரில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு வரை சிங்கள ராணுவத்துக்கு இத்தனை பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தது 58, 59-வது படைப் பிரிவுகள்தான். அதிகமான அளவு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இதில் இருந்தார்கள். ஆனால், மூன்று தாக்கு தல்களில் இதில் இருந்த 3,500 பேரைப் புலிகள் கொன்றுவிட்டதாகவும்... எனவே, ராணுவத் தரப்பு இனி போரில் வெல்ல முடியாத நிலை யில் ரசாயன குண்டுகளையே நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது சாவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த ஐந்து கிராமங்களையும் குறிவைத்துத் தாக்கும்போது அங்கு வாழும் 3 லட்சம் மக்களின் கதியும் அதோ கதிதான்.

புதுக்குடியிருப்புக்கு தென்மேற்கு, வடக்குப் பகுதியில் புலிகள் அமைப்பு மையம்கொண்டு இருப்பதாக நினைத்து, ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஆனால், அது முழு உண்மைஅல்ல என்ற தகவல் இப்போது சொல்லப்படுகிறது. 'பூநகரியை ராணுவம் பிடித்ததுமே புலிகள் அமைப்பு 50, 100 பேர்களாகப் பிரிந்து, தமிழ்ப் பகுதியின் காடுகளுக்குள் பரவிவிட்டனர். யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்புக் காடுகளுக்குள் இவர் கள் ஐக்கியமாகிவிட்டார்கள். மரபுவழி ராணுவ மாக இருந்தவர்கள் மீண்டும் கெரில்லாப் படை யாகப் பிரிந்துவிட்டார்கள். எனவே, புலிகள் அமைப்பை முழுமையாகத் துடைத்தெடுக்கப் போவதாகச் சொல்லி, சிங்கள ராணுவம் செய்யப் போவது தமிழ் மக்களைத் துடைத்தெறிவதாகத்தான் இருக்கும்' என்று செய்திகள்.

''அங்கிருப்பவர்களை அப்பாவி மக்களாக மட்டும் சொல்ல முடியாது. அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள்தான். அவர்கள் காட்டுக்குள் இருந்து தப்பித்து வந்தாலும், பொது மன்னிப்பு வழங்க மாட்டோம்'' என்று ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, ராணுவத்தின் பார்வையில், ஒன்றரை வயது கஜீபனும் 76 வயது மார்த்தம்மாவும் பயங்கரவாதிகள்தான். மக்கள் இப்போது அடர்ந்த பனைமரங்களுக்கு மத்தியில் டென்ட் அடித்தும், மேற்கூரை இல்லாமலும் பொழுதைக் கடத்துகிறார்கள். வெப்பக் காலத்தில் நிழலற்ற பனைமரத்துக்குக் கீழே வாழ்வதன் அவஸ்தை அவர்களுக்கு மட்டும் தெரியும். எல்லோருக்கும் ரசாயனக் குண்டு வீசாமலேயே கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்திருக்கின்றன. சோறு பொங்கிய தண்ணீரும், பருப்பு வேக வைத்த தண்ணீரும்தான் உணவு. பகல் முழுவதும் வெப்பக் காற்றில் உடல் கருக, நள்ளிரவோ பயங்கரமானதாக இருக்கிறது. துக்கம் தொண்டையை அடைப்பதால் தூக்கமில்லை. மிதமிஞ்சிய முழிப்பு அதிகாலையில் கண்ணை மயக்கும்போது, வெடிச் சத்தம் பலரை அப்படியே கொல்கிறது. சிலரை முழிக்க வைத்து அழச் சொல்கிறது.

இப்படியாக எழுதப்படும் இலங்கை வரலாற் றில்...

அரையாண்டுக்கு முன்னால் கிளர்ந்த அகிம்சைப் போராட்டம் பயனற்றுப்போனது. இளைஞர்கள் பலர் ஆயுதம் தூக்கினார்கள். அப்பாவி ஆண்களும் பெண் களும் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் அபலைகள் தாய்த் தமிழகத்துக்குத் தப்பி வந்து, சிறுகுடிசைகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். மூன்று லட்சம் பேர் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்குத் தப்பிப் போனார்கள். யாழ்ப்பாணம் பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவால் அமுக்கப்பட்டார்கள். கிழக்கு மக்கள் எந்த வசதியும் இல்லாமல் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆனார்கள். கொழும்புத் தமிழர்கள் அடையாளம் அனைத்தையும் இழந்து சிங்கள மக்களாக உருமாறினார்கள். 30 ஆயிரம் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மடிந்து போனார்கள். ஆறு காலப் பூசை நடந்த கோயிலில் மணியடிக்க ஆளும் இல்லை; மனமுருகி வணங்கப் பக்தனும் இல்லை. விவசாய நிலங்கள் வீடுகளாக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்பட்டார்கள். சைவப் பெயர்கள் அனைத்தும் சிங்களம் ஆக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்க மட்டுமல்ல, காற்று வாங்கவும் யாரும் வரவில்லை. வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப் பட்டார்கள்; இரண்டு லட்சம் பேர் மனநிலை பாதிக் கப்பட்ட நிலையில் கம்பி வேலிக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டார்கள்.

கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்!


COURTESY: VIKATAN

10 April 2009

'என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...'' வன்னிக் காட்டில் பிரபாகரன் சபதம்?


சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன.

தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம்.
''ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான்
புலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளின் கவனம் ஈழத் துக்கு ஆதரவாகத் திரும்பியும் இந்தியாவின் தலையீடு இருந்ததால், போர்நிறுத்தம் சாத்தியமற்றுப் போனது. அதனால் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்கும் வண்ணம், புலிகள் ஊடறுப்புத் தாக்குதலைக் கையிலெடுக்கத் தொடங்கினார்கள். இதில் சிங்கள ராணுவத்தினர் சிதறுண்டுபோனார்கள். ஆனால், போர் நிறுத்தத்துக்கு பதிலாக வெளிநாடுகளின் உதவியோடு கொடூர ஆயுதங்களைக் கொண்டுவந்து குவித்து, புதிய வியூகங்களை வகுத்துச் செயல்படத் தொடங்கிவிட்ட சிங்கள ராணுவம், கடந்த இரண்டுவாரங்களாக இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி படுஉக்கிரமான தாக்குதலை நடத்திவருகிறது. இந்தியாவின் ஆயுதங்களை சரிவரப் பயன்படுத்த இலங்கை ராணுவத்தினருக்குத் தெரியாததால்... இப்போது இந்திய ராணுவத்தினரே போரில் குதித்துவிட்டார்கள். அதனால் ஈழப் போராட் டம் இன்னும் சில நாட்கள்கூட நீடிக்காது. முப்பதாண்டு காலமாக ஆயுதமேந்திப் போராடிய புலிகள் மடிகிற காலம் வந்துவிட்டது...'' என இலங்கை நிலவரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார்கள்.
பொறியில் சிக்கிய புலித் தளபதிகள்!
அவர்களே தொடர்ந்து பேசும்போது, ''கொடூரமான ஆயுதங்கள் கைக்கு வந்தவுடனேயே அசுரப் பாய்ச்சலால் புலிகளின் கைவசமிருந்த இரணைப்பாலை, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேறிய ராணுவத் தரப் பினர், புலிகளின் முக்கியத் தளபதிகளான கேணல் பானு, கேணல் லாரன்ஸ் ஆகியோரை உயிரோடு பிடிக்கத் திட்டமிட்டனர். பிரபாகரனின் அபிமானம் பெற்ற இந்த இருவரையும் உயிரோடு பிடித்தால், சித்ரவதை செய்து பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்று கணக்குப் போட்டது ராணுவம். அதன்படி, ராணுவத்தின் முக்கியஸ்தர்களான பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமையில் 58-வது டிவிஷனும், கேணல் ரவிப்பிரியவின் தலைமையில் 68-வது டிவிஷனும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையில் 53-வது படையணியும் ஒருசேர வியூகம் வகுத்தன. அதன்படி, புலித் தளபதிகளின் உணவு விநியோகப் பாதைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. ஒரே நேரத்தில் புலிகளின் முக்கியத் தளபதிகளைக் குறிப்பிட்ட வளையத்துக்குள் கொண்டுவந்து, நான்கு முனைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது ராணுவம். எப்போதுமே பல கூறுகளாகப் பிரிந்து போர் செய்யக் கூடிய புலிகளின் தளபதிகள், ராணுவத்தின் சூழ்ச்சிக்கு இலக்காகி... அம்பலவன்பொக்கனை சந்திப்பை மட்டும் பயன்படுத்தி ஒரே குழுவாகினர். அந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் வலிமை வாய்ந்த விஜயா காலாட்படையும், கஜபா ரெஜிமென்ட் படையும் கைகோத்து, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் புலிகளையும் அவர்களின் தளபதிகளையும் மடக்கினர். கடைசி நேரத்திலேயே இந்த சூழ்ச்சி புலிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. அடுத்தகணமே அவர்கள் கடுமையான தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பானு, லாரன்ஸ் உள்ளிட்ட தளபதிகளை உயிரோடு பிடிக்க நினைத்த சிங்கள ராணுவத்தினர், தாக்குதல் நடத்தாமல் புலிகளை சரணடையும்படி வேண்டினர். ஆனாலும், உயிரோடு பிடிபட்டால் என்னாகும் என்பது தெரிந்து புலிகளும் தளபதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். பதினாறு மணி நேரம் இரு தரப்புக்கும் தொடர்ந்து நடந்த தாக்குதலில் சில தளபதிகளும் சில புலிகளும் மட்டுமே தப்பிக்க முடிந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளும் புலித் தளபதிகளும் மொத்தமாகக் கொலையான விஷயம் அடுத்த நாள் காலையில்தான் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியவந்தது...'' என்று புலிகளின் பின்னடைவு குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.
''என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது...''
இலங்கை அரசு மற்றும் ராணுவத் தரப்பில் விசாரித்தபோது, ''இலங்கையில் இதுநாள் வரை சவாலாக இருந்துவந்த ஒட்டுமொத்தப் புலிகளையும் ஒடுக்கி விட்டோம். பிரபாகரன், ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக வன்னி காட்டுக்குள் தன்னுடன் ஒருசில புலிகளை மட்டும் அழைத்துக்கொண்டு போய்விட்டார். போகும்போது ஒரு விஷயத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார். 'இனி யாரும் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டாம். ராணுவம் காட்டுக்குள் வந்தாலும் நான் உயிரோடு சிக்க மாட்டேன். என் சாம்பல்கூட அவர்களின் கையில் கிடைக்கக் கூடாது...' என்று சபத மிட்டுச் சென்றிருக்கிறார். கூடவே, 'இந்திய அரசின் உதவிகளால்தான் ராணுவத்தை எதிர்த்துப் புலிகளால் முழு பலத்தோடு போரிட முடியவில்லை...' என்றும் சொன்னவர், இந்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். இருந்தாலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளிலும் நாங்கள் இறங்கி இருக்கிறோம். அவருடைய மகன் சார்லஸ் ஏற்கெனவே எங்கள் தாக்குதலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். பிரபா கரனின் மற்ற பிள்ளைகளும் மனைவியும் லண்டன் போய்விட்டார்களாம். விரைவில் அவர்களையும் பிடிப்போம். இனி புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது... அதற்கு பிரபாகரன் ஜாதகமே சாட்சி. சமீபத் தில் பிரபாகரனின் ஜாதகம், போட்டோ ஆல்பமெல்லாம் அவர் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டபோது சிக்கியது. அந்த ஜாதகத்தை வைத்துக் கணித்ததில் பிரபாகரனுக்கு உடல்ரீதியாகப் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது...'' என்கிறார்கள்.
வருமா வணங்கா மண்?
ஈழத்தில் பசியாலும் காயங்களாலும் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு உதவும் விதமாக பிரிட்டனில் இருந்து 'வணங்கா மண்' என்ற கப்பல், உலகத் தமிழர்கள் திரட்டிக் கொடுத்த பொருட்களோடு கடந்த சில தினங்களுக்கு முன் முல்லைத்தீவுக்குக் கிளம்பியிருக்கிறது. பிரிட்டன் எம்.பி-க்கள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையின் கொடூரத்தையும் அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்தையும் வெளிப்படையாகவே பேசி 'வணங்கா மண்' பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையின் கடற்படை அதிகாரிகளோ, 'வணங்கா மண் கப்பல் புலிகளுக்குச் சொந்தமானது. அதனால் எக்காரணம் கொண்டும் அதை வன்னிக்கு வரவிட மாட்டோம். மீறி அந்தக் கப்பல் வந்தால்... அதன் மீது சரமாரி தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்!' என பகீர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.


நன்றி
விகடன்