21 April 2009

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் வழியாகவும் உள்ளே புகுந்துள்ளனர்.
தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படையினர் முயற்சித்துள்ளனர்.
அதேவேளையில் முன்னணிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இந்தப் பொதுமக்களையே படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனை எதிர்க்க முனைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளின் போது சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தொடக்க கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20.04.09) ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 வரையிலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இன்றும் இந்த நிலை தொடர்கின்றது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் உள்ள 2 ஆயிரம் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குமாறும் கப்பல் மூலமாக அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தொகையானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதால் உடனடியாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமானதாகியுள்ளது.
புதுமாத்தளன் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டதால் புதிய தளம் ஒன்றில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் வந்து செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது.
மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மக்களைப் பயன்படுத்துவதும் கடுமையான போர்க் குற்றங்கள் என்பதுடன், இந்த மனிதப் படுகொலைக்குக் சிறிலங்கா அரசாங்கமும், ஆயுதப் படைகளின் தளபதிகளுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகும்.
இந்த போருக்குள் அகப்பட்டுள்ள தமிழ்ப் பொதுமக்களை மீட்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்தப் போர்க்குற்றங்கள் மிகவும் கடுமையானவை எனக்கருதும் விடுதலைப் புலிகள், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசரமான அனைத்துலக ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும் கருதுகின்றது.
கடுமையான போர்க்குற்றங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினையை எதிர்கொள்ளத்தக்க விதமாகச் செயற்படுமாறும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

courtesy: nakeeran

No comments: