21 April 2009

சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்

நாங்கள் சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்: விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.
அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார்.
"நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது" எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய புலித்தேவன், "நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விசயத்தில் தலையிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
சிங்களப்படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துமிருப்பதாகவும் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், எம்முடன் இணைந்தும் போராடுகின்றனர். ஏனென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகத்தான் போராடுகின்றது" எனவும் தெரிவித்த புலித்தேவன், "அதனால்தான் அவர்கள் சுயவிருப்புடன் எமது அமைப்பில் இணைந்து போராடுகின்றனர்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

courtesy: nakeeran

No comments: