21 April 2009

இலங்கையில் இரத்த ஆறு

இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த ஒரு சில மணி நேரமே உள்ளது

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்துவிட வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கும் நிலையிலேயே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை மகிந்த அறிவிக்கா போதிலும், "ஒரு இரத்த ஆறு ஓடலாம் என நாம் கவலையடைந்திக்கின்றோம்" என நியூயார்க்கை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்வாளரான அனா நிஸ்டால் தெரிவித்திருக்கின்றார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்த்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணி நேரமே உள்ளது என அவர் வாசிங்டனில் உள்ள புரூக்கிங்க்ஸ் நிலையத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
"தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றங்களாகக் கருதப்படும் என்பதையும், இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள், தளபதிகள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

courtesy: nakeeran

No comments: