14 December 2007

நட்பு

நட்பு என்பது உனது நண்பனிடம் உனக்கு ஏற்படும் ஒரு தனிச் சிறப்பான அக்கரை. இந்த அக்கரையை நாம் ஒரு வகையில் அன்பு என்று கருதலாம். பண்டைய கிரேக்கத்தில் தத்துவ ஞானிகள் நட்பை 3 விதமாக பார்த்தனர் :1) நாம் நட்பாக ஏற்றுக்கொள்ளும் நபர்களை பற்றி எந்த விதமான் முன் அனுமானமும் இல்லாமல், தன்னிலே ஒரு மதிப்பை உருவாக்கிக் கொண்டு ஏற்படும் நட்பு. அதாவது கிறித்துவ மரபுகள் பின்பு அனுசரித்ததைப்போல கடவுள் எல்லாவற்றையும் படைத்துள்ளார் நமக்காக சக மனிதர்களையும் படைத்துள்ளார். எனவே நாம் கடவுளை நேசிப்பது போல் மனித குலத்தையும் நேசிக்கவேண்டும் என்ற பொதுப்படையான அன்பு.2) நாம் நேசிக்கும் நபர்கள் இந்த மாதிரி இருக்கவேண்டும், அவரது நல்ல குணங்கள் கெட்ட குணங்கள், அவரது அழகு அல்லது அழகின்மை; தொடர்ந்து நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படுவதற்கான உணர்வு ரீதியான பிணைப்பு இவை அனைத்தையும் உறுதி செய்துகொண்டு அதனடிப்படையில் தொடரப்படும் நட்பு. அதாவது இதில் பாலியல் ரீதியான உறவையும் சேர்த்தே கிரேக்க தத்துவ சிந்தனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே காதல் என்பதையும் காமம் என்பதையும் சேர்த்துக் குறிக்கும் ஈராஸ் என்ற வார்த்தையை இத்தகைய உறவுகளை வர்ணிக்க பயன்படுத்துகின்றனர்.3) மூன்றாவது வகையான நேசம் நட்பு மட்டுமல்லாது ஒருவரது குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் நேசம், வர்த்தக கூட்டாளிகளிடையே ஏற்படும் நெருக்கம், மேலும் விஸ்தாரமாக ஒருவர் தனது நாட்டையும் பிறந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பது.நேசம் குறித்த இந்த பாகுபாடுகளில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை... இதெல்லாம் இல்லமலேயே ஏற்படும் சுதந்திரமான நட்பு பற்றி கிரேக்க சிந்தனையாளர்கள் யோசிக்கவில்லை. பெரும்பாலும் இந்த கிரேக்க சிந்தனை மரபிலேயே வந்த தத்துவ ஞானி அரிஸ்டாடில் தன்னுடைய எதிக்ஸ்(ஒழுக்கம்) என்ற நூலில் நட்பு பற்றி குறிப்பிடத் தகுந்த விஷயங்களை அலசுகிறார்... இவரும் ஒரு 3 வகையான நட்பு பற்றி பேசுகிறார்...1) சுக போகங்களுக்காக இணையும் நட்பு2) பயன் கருதி இணையும் நட்பு3) ஒழுக்கம், நேர்மை, நற்பண்புகளில் ஈர்க்கப்பட்டு இணையும் நட்பு.இதுதான் அரிஸ்டாடிலின் நட்பு பற்றிய 3 அடிப்படை பிரிவுகள்.அதாவது நாம் ஒரு நண்பனை அவனால் நமக்கு கிடைக்கும் மகிழ்சிக்காக விரும்பலாம். அல்லது அவனால் நமக்கு கிடைக்கும் பயன் கருதி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் 3வது நட்பு மிக முக்கியமானது. ஒருவரின் நேர்மை, ஒழுக்க குணம், அவரது நல்ல நடத்தை மற்றும் இன்ன பிற உயர்ந்த மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு நட்புறவு பிணைக்கப்படுவது.3வது வகை நட்பு சிறந்தது. ஏனெனில் முதல் இரண்டு வகையிலும் நாம் நம்முடைய சந்தோஷம், நமகான பயன் கருதி ஒருவரிடம் பழகுவது, ஆனால் 3வது வகை நட்பு மற்றவரின் குண நலன் மீது ஏற்படும் மன ஈர்ப்பின் காரணமாக உருவாகும் உண்மையான நட்பு. ஆம்... அரிஸ்டாடில் அப்படித்தான் கூறினார். இந்த வகை நட்பில் அவரிடமிருந்து பொருள் சார்ந்த எதிர்பார்ப்பு இல்லை. அதனால் ஏற்படும் போலித்தனங்கள் இல்லை. நாம் நம் அறிவால் ஒருவரிடம் கண்டுணரும் குண நலன் மீதான ஒரு நட்பு, அந்த நபர் மீதான அன்பாக மாறுகிறது.எனவே உணர்ச்சிப் பூர்வமான நட்பு என்பது பல மகிழ்ச்சிகளை நமக்கு கொடுக்கலாம். அதெல்லாம் உடல், மன வருப்பங்களைச் சார்ந்தது... ஆறறிவால் உணரும் நட்பே நீண்ட காலம் நிற்க கூடியது.

இணையத்திலிருந்து தொகுப்பு

No comments: