14 December 2007

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?

நமது நாடு இப்போதைய வேகத்திலேயே வளர்ச்சிப் பாதையில் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வறுமையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்’’ எனப் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது. இப்படிப் பேசுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திட்டக் கமிஷன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், ‘‘அடுத்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்’’ என நேரெதிரான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். உணவுக்கு உத்தரவாதமில்லாத நிலைமை உருவாகும் என எச்சரித்துப் பத்தே நாட்களில், ‘வறுமை பெருமளவில் ஒழிந்துவிடும்’ என்றால், எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் யார் என்று எப்படி சர்வதேசம் நிர்ணயக்கிறது ? இந்தியா அதனை எப்படி பார்க்கிறது?நாளன்றுக்கு ஒரு டாலருக்குக் கீழ், அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத்தான் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்தவித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். இருக்கிற புள்ளிவிவரங்களைத் தனது வசதிக்கு ஏற்ப அரசு பயன்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது (1995&96) கோபன்ஹேகனில் நடந்த ‘உலக வளர்ச்சிக்கான உச்சி மாநாட்’டில் இந்தியாவில் 39.9 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப் பதாக இந்திய அரசு தெரிவித்து, கூடுதல் நிதியுதவியை வேண்டியது. ஆனால், தேர்தல் நெருங்கிவந்த சூழலில் ஓட்டு வாங்கும் நோக்கத்தோடு, ‘இந்தியாவில் 19.5 சதவிகிதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். நாங்கள் வறுமையைப் பெருமளவில் ஒழித்து விட்டோம்’ என ஊடகங்களில் ஒரு பொய்யை அதே மத்திய அரசு அவிழ்த்து விட்டது!
அப்போது மட்டுமல்ல... இன்றும்கூட அதுவேதான் அரசின் நடைமுறை! கடன் வாங்குவதற்காக ஒரு புள்ளிவிவரம், ஓட்டு வாங்குவதற்காக வேறொன்று! ‘உலக பட்டினி அட்டவணை’யில் இந்தியா தொண்ணூற்று நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ சர்வாதிகாரத்தாலும், உள்நாட்டுப் போராலும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவைவிட நல்ல நிலைமையில் தமது குடிமக்களை வைத்துள்ளன என்று அந்த அட்டவணை சொல்கிறது. பட்டினியைக் குறைத்து வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பாதியைக்கூட இந்தியா எட்டவில்லை என்பதை 2007&ம் ஆண்டுக்கான ‘உலக பட்டினி அட்டவணை’ வெளிப்படுத்தியுள்ளது. பிரதமரின் ‘ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி’ என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளின் பின்னால் இருளில் பதுங்கியிருக்கும் உண்மை இதுதான்! அடையாள அட்டை அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால்கூட, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். உள்நாட்டுப் பாதுகாப்பு உட்படப் பலவிதங் களில் பயன்படக்கூடியது என்பதால் இந்த செலவு ஒன்றும் வீணானதல்ல. அட்டை தயாரிக்கும்போது நிர்வாக மற்றும் ஊழல் காரணங்களால் தவறான விவரங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்வதுதான்முக்கியம்! ‘வறுமையை ஒழிப்போம்’ என்று காங்கிரஸ் கட்சி வெகுகாலமாகவே சொல்லி வருகிறது. வறுமை ஒழியவில்லை... காங்கிரஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது. மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் இந்த வகையில் ‘காங்கிரஸ் பிரதமராக’ இல்லாமல், மனசாட்சியுள்ள அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு! குறிப்பு :சமுதாயத்தில் ஒரளவு உயர்வுப்பெற்ற(பணத்தாலும்,கல்வியாலும்) மக்கள் , தம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உதவ முன்வருவார்களாயின் , அரசுடன் சேர்ந்து நாமும் வெகு விரைவில் வறுமையை ஓழித்துவிடலாம்.--------------------------------------------------------------------------------
நன்றி திரு.ரவிக்குமார், ஜீ.வி

No comments: