14 December 2007

மனித நேயம் எங்கே

முன்னொரு காலத்தில், சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று.புதிய மன்னர் பதவியேற்கப் போவதையொட்டி, அரண்மனையில் அலங்கார வேலைப்பாடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாகவே ஓர் ஓவியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இருந்த மரப்பல்லி ஒன்று இனி எங்கே போவது என்று தெரி யாமல், அங்குமிங்கும் ஓடி கட்டிலின் அடியில் போய் ஒட்டிக்கொண்டது. கட்டிலில் வஸ்திர அலங்காரம் செய்ய வந்தவன், கவனக்குறைவால் பல்லியோடு சேர்த்து ஒரு ஆணியை அடித்துவிட்டான். பல்லி வலி தாங்க முடியாமல் கத்தியபோதும், அது தன் இருப்பிடத்தை விட்டு நகரவே முடியவில்லை. பல நாட்களாக அந்தப் பல்லி கத்திக்கொண்டு இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவேயில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அரசர் கட்டிலின் திரைச்சீலையை மாற்றச் சொன்னபோது, ராணி தற்செயலாக கட்டிலின் அடியில் ஆணியில் அடிபட்டு ஒரு பல்லி மெலிந்துபோய் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டு மன்னரிடம் காட்டினாள். மன்னர், ‘ஐயோ பாவம்!’ என்றபடியே, எப்படி இந்தப் பல்லி இத்தனை நாட்களாக உயிரோடு இருந்தது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது உத்திரத்திலிருந்து இன்னொரு பல்லி இறங்கி வந்து, தன் வாயில் கவ்விக்கொண்டு வந்திருந்த இரையை, ஆணியில் மாட்டிக்கொண்டு இருந்த பல்லியின் வாயில் புகட்டிவிட்டுப் போவதைக் கண்டார். அவரால் நம்பவே முடியவில்லை! உயிருக்குப் போராடிய பல்லியை இன்னொரு பல்லி உணவளித்துக் காப்பாற்றி இருக்கிறது. இயற்கையில் ஒரு உயிரைக் காப்பாற்ற, பல்லிகூட தன்னால் ஆனதைச் செய்கிறது. மனிதராகிய நாமோ, அடுத்தவர் உணவைப் பறித்தும், அதிகாரம் செய்தும் வருகிறோமே என்று மனமாற்றம் கொண்டார் அந்த மன்னர் என்று சீன சரித்திர குறிப்பேடு சொல்கிறது. நடந்தது உண்மைச் சம்பவமோ, கற்பனையோ... எதுவாக இருப்பினும், உயிர்ப் போராட்டத்தில் ஒன்றையொன்று சார்ந்தும் உதவியும் பகிர்ந்தும் வாழ்வதுதான் இயற்கையின் அற்புதம். அந்த அக்கறையும் நேசமும்தான் மனிதனின் அடிப்படை உணர்வுகள்! இன்று நாம் மறுப்பது சாப்பாட்டை மட்டுமல்ல; சக மனிதன் மீதான நமது அக்கறையையும்தான்! நன்றி : ஆனந்தவிகடன்

No comments: