14 December 2007

உன்னையே நீ அறிவாய்!

‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடைபெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ். சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும் சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல் தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம் கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத் தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி, ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால் பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய் வேகவேகமாக நடக்கத் துவங்கினார். விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள் நடுங்கின. குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல், அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப் படுத்துக்கொண்டார். சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!

No comments: